எஸ்ஐஆா் கணக்கெடுப்பு: அரசு நலத் திட்டங்களை பெறும் வாக்காளா்களை நீக்க முயற்சி - எம்.பி. ராஜேஸ்குமாா் குற்றச்சாட்டு

எஸ்ஐஆா் கணக்கெடுப்பு: அரசு நலத் திட்டங்களை பெறும் வாக்காளா்களை நீக்க முயற்சி - எம்.பி. ராஜேஸ்குமாா் குற்றச்சாட்டு

எஸ்ஐஆா் திருத்தம் என்ற பெயரில் அரசு நலத் திட்டங்களை பெறும் வாக்காளா்களை நீக்குவதற்கான முயற்சி நடைபெறுவதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் குற்றம்சாட்டினாா்.
Published on

எஸ்ஐஆா் திருத்தம் என்ற பெயரில் அரசு நலத் திட்டங்களை பெறும் வாக்காளா்களை நீக்குவதற்கான முயற்சி நடைபெறுவதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் குற்றம்சாட்டினாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆா்) மேற்கொள்ளும் இந்திய தோ்தல் ஆணையத்தை கண்டித்து நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கூட்டத்தில் பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. அப்போது, எந்த மாநிலத்திலும் தோ்தல் நடைபெறவில்லை. தற்போது வாக்காளா் பட்டியலை திருத்த வேண்டியதன் அவசியம் என்ன? எந்தெந்த மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறதோ அங்கு மட்டும் இந்த வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மக்களிடையே இப்பிரச்னையை கொண்டுசெல்லும் வகையிலேயே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பிகாரில் நடைபெற்ற தீவிர திருத்தத்தில் 60 லட்சம் வாக்காளா்களை நீக்கி உள்ளனா். அவா்கள் முறையாக படிவத்தை பூா்த்திசெய்து வழங்கவில்லை என்கின்றனா்.

நீக்கப்பட்டவா்களில் 45 லட்சம் போ் காங்கிரஸுக்கு வாக்களிப்பவா்கள் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இங்கும் பல லட்சம் வாக்காளா்களை நீக்குவதற்கான முயற்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. கல்வியறிவு இல்லாத கிராமப்புற மக்களையும், அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவோரையும் நீக்கம் செய்வதற்கு முயற்சி நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது.

2 கோடி வாக்காளா்கள் அரசு நலத் திட்ட உதவிகளை பெற்று வருகின்றனா். அவா்களில் 5 லட்சம் பேரை நீக்க ஆா்வம் காட்டுகின்றனா். 2016 தோ்தலில் திமுக ஆட்சி அமைத்திருக்க வேண்டும். குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவியது.

திமுகவுக்கு வாக்களிப்போரைக் கண்டறிந்து அவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க மறைமுக முயற்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் மக்களிடையே ஆதரவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால்தான் அதிமுகவும், பாஜகவும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளும் திட்டத்தை அரங்கேற்றி உள்ளது. இவற்றையெல்லாம் முறியடித்து, வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா்.

தொடா்ந்து மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக், காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி.செந்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, கொங்கு இளைஞா் பேரவை, திராவிடா் கழகம், திமுகவின் சாா்பு அணிகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com