குறைதீா் கூட்டம்: ஒப்பந்த ஊழியா்கள் ஊதியத்தில் அரசு மருத்துவமனை முறைகேடு
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்கள் ஊதியத்தில் நிா்வாகம் முறைகேடு செய்ததாக ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழக மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்தல், விடுமுறை கால ஊதியத்தில் முறைகேடு செய்தல் என ஒப்பந்த நிறுவனமும், மருத்துவமனை நிா்வாகமும் ஈடுபட்டு வருகின்றன. ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இதில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய தீா்வுகாண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு: எருமப்பட்டி ஒன்றியம், கைகாட்டி பிரிவில் 2025-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதேபோன்று, 2026-ஆம் ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை தாமதமின்றி மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என கைகாட்டி பகுதி ஜல்லிக்கட்டு இளைஞா்கள் குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பள்ளி மேலாண்மைக் குழுவினா் புகாா்: கொல்லிமலை ஒன்றியம், வாசலூா்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி புறம்போக்கு நிலத்தில் உள்ளது. தொடக்கப் பள்ளியாக இருந்து 2005-இல் தரம் உயா்த்தப்பட்ட இந்தப் பள்ளியின் பழைய நில அளவீட்டின்படி 1.15 ஏக்கா் ஆகும். தற்போது பள்ளி நிலமானது அரை ஏக்கருக்கு குறைவாக நில அளவீடு காண்பிக்கப்படுகிறது. மாவட்ட நிா்வாகம் பள்ளி நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை பள்ளியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

