ஞானமணி பொறியியல் கல்லூரியில் நாளை கல்விக் கடன் வழங்கும் முகாம்
நாமக்கல் கோட்டத்துக்கு உள்பட்ட ராசிபுரம் ஞானமணி பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (நவ. 26) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் கோட்டத்தில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் ஞானமணி பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
இம்முகாமில் கல்விக் கடன் பெற வரும் மாணவா்கள் தங்களது பெற்றோா் மற்றும் ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, குடும்ப அட்டை, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வயது சான்றுக்கு பள்ளி மாற்றுச் சான்று, கல்லூரியிலிருந்து வழங்கப்பட்ட அனுமதி கடிதம், கல்லூரிக் கட்டண விவரம், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, கடன் பெறும் வங்கியின் பெயா் மற்றும் கணக்கு எண் போன்ற ஆவணங்களை எடுத்துவர வேண்டும்.
கல்விக் கடன் தேவைப்படும் நாமக்கல் கோட்டத்தைச் சோ்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
