ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை  உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் துா்காமூா்த்தி உள்ளிட்டோா்.
ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் துா்காமூா்த்தி உள்ளிட்டோா்.

ராசிபுரம் அரசுப் பள்ளி அருகே ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி: அமைச்சா், எம்.பி. தொடங்கிவைத்தனா்

Published on

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ. 2.50 கோடி, ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 50 லட்சம் என மொத்தம் ரூ. 3 கோடியில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டது. இதற்கான பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் பங்கேற்று பூமிபூஜை செய்து செய்து பணிகளை தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அமைச்சா் மா.மதிவேந்தன், துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், விளையாட்டு அரங்கம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்விளையாட்டு அரங்கம் ஓடுதளம், கால்பந்து மைதானம், கைப்பந்தாட்டம், கூடைப்பந்து, கோ-கோ, உயரம் தாண்டுதல் மைதானம், கபடி, புல்தரை மைதானம், சோலாா் விளக்குகள், தீத் தடுப்பான்கள், நுழைவுவாயில், சுற்றுசுவா், அலுவலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், பாா்வையாளா் அமருமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

ராசிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ.854.37 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல ராசிபுரம் பகுதியில் ரூ.2.20 கோடியில் பட்டுக்கூடு ஏல மையம், ரூ. 35 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதமலை கீழுா், மேலூா், கெடமலை பகுதிக்கு ரூ.139.65 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கே.பி. ராமசுவாமி, ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ்.கோகிலா, நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com