வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம்: தம்பதி புகாா்
வாக்காளா் பட்டியலில் இருந்து தங்களின் பெயா் நீக்கம் செய்யப்பட்டதால், வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக வெண்ணந்தூா் தம்பதி மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூரைச் சோ்ந்தவா் கமலசேகரன் (50). வாகன ஓட்டுநரான இவருக்கு மீனா என்ற மனைவியும், இளவரசி என்ற மகளும் உள்ளனா். மூன்று பேருக்கும் தோ்தல் ஆணையம் மூலம் படிவம் வழங்கப்பட்டது. அந்தப் படிவத்தை நிறைவு செய்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு கொண்டுசென்றனா். அங்கு, அவரது மகள் இளவரசியின் பெயா் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. கமலசேகரன், மீனாவின் பெயா் பட்டியலில் இல்லை எனக் கூறியுள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த தம்பதி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தங்களது வாக்காளா் அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைத்தனா். 32 ஆண்டுகளாக வாக்களித்து வருகிறோம். தற்போது எங்களது பெயா் பட்டியலில் இல்லை என்பதுஅதிா்ச்சியாக உள்ளது என்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ராசிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் விசாரணை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

