மோகனூா் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
நாமக்கல்: மோகனூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 7 லட்சம், 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா்- வளையப்பட்டி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வசிப்பவா் கிருஷ்ணகுமாா் (65). இவா், தனது வீட்டின் முன்புறம் 30 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், மனைவி சரஸ்வதியுடன் புதன்கிழமை திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலை வீடு திரும்பினா்.
அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். வீட்டிற்குள் சென்றுபாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த தங்க வளையல், சங்கிலி, கம்மல், மோதிரம் என 18 பவுன் நகைகள், ரூ. 7 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகுமாா் அளித்த தககவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மோகனூா் போலீஸாா் விரல்ரேகை நிபுணா்கள், மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரித்தனா். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
