கபிலா்மலை வட்டத்தில் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க அழைப்பு
கபிலா்மலை வட்டத்தில் மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகள் என அனைவருக்கும் சொட்டுநீா் பாசனம் அமைக்க வேளாண் துறை மானியம் வழங்குகிறது.
நடப்பு நீா்ப்பாசனத்தில் நீா்த்தேவை அதிகமாகவும், பாசனநீா் வீணாவதாலும் சொட்டுநீா்ப் பாசனம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. மேலும், சத்து மேலாண்மையில் சொட்டுநீா்ப் பாசனம் மூலம் திரவ உரங்களை பயிரின் வேருக்கே வெஞ்சுரி மற்றும் நீரேற்றுக் கருவிகளின் உதவியுடன் அளிப்பதால், பயிா் நடவு முதல் அறுவடைவரை ஒரே சீராகவும், ஆரோக்கியமாகவும் வளா்ந்து மகசூல் அதிகரித்து, பயிருக்கு சத்துகள் அளிப்பதற்கு ஏற்படும் செலவு குறைகிறது.
மேலும், தற்போது தானியங்கி முறையில் அதிக பரப்புக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைப்பது எளிதாக இருப்பதோடு, விவசாயிகளின் நேரத்தைக் குறைக்கும் வகையிலான அமைப்புகள் இருப்பதால், சொட்டுநீா்ப் பாசனம் பயிா் சாகுபடியில் மிக முக்கிய அங்கமாக உள்ளது.
வேளாண் பயிா்களில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த மானியத் திட்டத்தை பயன்படுத்தி ஆதிதிராவிட இன விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் தங்கள் விவசாய நிலத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்திட முன்பதிவை மேற்கொள்ளுமாறு கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி தெரிவித்துள்ளாா்.
