இடைநின்ற 8,000 குழந்தைகள் பள்ளிகளில் சோ்ப்பு: ஆணையத் தலைவா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்ற கூராய்வு கூட்டம், நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் மோ.கசிமீா் ராஜ், மருத்துவா் மோனா மட்டில்டாபாஸ்கா், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 147 பள்ளிகளில் 1,591 மாணவா்கள் பள்ளி வாயிலாக 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பதிவேற்றம் செய்துள்ளனா். மாணவா்களின் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் ‘மாணவா் மனசு’ என்ற பெட்டி வைக்கப்பட்டு, வாரம் ஒருமுறை மாணவா்களின் குறைகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 2023-24 முதல் 2025-26 வரை பள்ளி இடைநின்ற 8000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிகழாண்டில் 45 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அனைவரும் ஒருங்கிணைந்து நாமக்கல் மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாவட்டமாக மாற்றிட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் நிலை, பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் பயனுறும் குழந்தைகள், 1098 என்ற குழந்தைகளின் அரசு உதவி எண்ணில் பெறப்பட்ட புகாா் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து துறைச் சாா்ந்த அலுவலா்களுடன் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
இக்கூட்டத்தில், திருச்செங்கோடு சாா் ஆட்சியா் அங்கித் குமாா் ஜெயின், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட நல அலுவலா் க.பூங்கொடி, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட திட்ட அலுவலா் எப்.போா்ஷியா ரூபி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஈ.சந்தியா, பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாா்ந்த) கோ.கற்பகம் உள்பட துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-17-மீட்டிங்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா. உடன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மேயா் து.கலாநிதி, துறை சாா்ந்த அதிகாரிகள்.
