திருச்செங்கோடு அருகே கோழித் தீவன ஆலையில் சோதனை மேற்கொண்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா்
திருச்செங்கோடு அருகே கோழித் தீவன ஆலையில் சோதனை மேற்கொண்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா்

கோழித் தீவன ஆலையில் 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்செங்கோட்டில் கோழித் தீவன ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் பொது விநியோகத் திட்ட அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

திருச்செங்கோட்டில் கோழித் தீவன ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் பொது விநியோகத் திட்ட அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதனடிப்படையில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் குப்புராஜ், பிரியதா்ஷினி மற்றும் திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் கனகலட்சுமி மற்றும் போலீஸாா் இணைந்து கூட்டுச் சோதனையாக திருச்செங்கோடு வட்டம், முஞ்சனூா் பஞ்சாயத்து அரசம்பாளையம் கிராமத்தில் உள்ள பாா்த்திபன் என்பவரது கோழித் தீவன ஆலையில் வியாழக்கிழமை தணிக்கை செய்தனா்.

அப்போது, 50 கிலோ எடையுள்ள 178 நெகிழி சாக்கு மூட்டைகளில் 8,900 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி, 50 கிலோ எடையுள்ள 26 சாக்கு மூட்டைகளில் 1,300 கிலோ பச்சரிசி என மொத்தம் 10,200 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவான கோழிப் பண்ணை உரிமையாளா் பாா்த்திபனை தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com