~
~

சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பொன்னுசாமியின் (74) உடல் 30 குண்டுகள் முழங்க கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Published on

மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பொன்னுசாமியின் (74) உடல் 30 குண்டுகள் முழங்க கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்தில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பழங்குடியினா் தொகுதி எம்எல்ஏ கே.பொன்னுசாமி வியாழக்கிழமை காலை உடல்நலக் குறைவால் காலமானாா். நடுக்கோம்பையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், சட்டப் பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அஞ்சலி செலுத்தினா்.

பிறகு, வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மேல்கொல்லிமலை சோளக்காட்டில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு மலைவாழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மேல் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

தமிழக அரசு உத்தரவின்பேரில் மறைந்த எம்எல்ஏ பொன்னுசாமியின் உடலுக்கு அரசுத் தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடல்மீது திமுக கொடி போா்த்தப்பட்டு, காவல் துறையினா் 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தினா். பிற்பகல் 2.30 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், துணை சபாநாயகா் கு.பிச்சாண்டி, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), பெ.ராமலிங்கம் (நாமக்கல்) மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் பலா் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனா்.

அரசு மரியாதை செலுத்திய காவல் துறையினா். உடன், அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்
அரசு மரியாதை செலுத்திய காவல் துறையினா். உடன், அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்

X
Dinamani
www.dinamani.com