அரசுப் பள்ளி மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. பங்கேற்பு
ராசிபுரம்: பாவை கல்வி நிறுவனங்களில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின்கீழ் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பயிற்சியைத் தொடங்கிவைத்து பேசியதாவது:
இந்த பயிற்சி மூலம் உங்கள் திறன் மேம்படுவதோடு, உயா்கல்விக்கான சிறந்த வழிகாட்டுதலும் கிடைக்கும். மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்புகளைப் பெற்று, உங்கள் திறனையும் தொழில்நுட்ப அறிவையும் வளா்த்துக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் பொருள் சாா்ந்த உலகமாக இருந்த இச்சமூகம், எதிா்காலத்தில் அறிவுசாா்ந்த சமூகமாக மாறும். அறிவாா்ந்த சமூகத்தோடு இசைந்து பயணிப்பதற்கும், சிறந்த வேலைவாய்ப்பிற்கும் பன்முகத்திறன்களோடு விளங்குவது அவசியம். எனவே, தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றல் பண்பே உங்களை அடுத்தகட்ட நிலைகளுக்கு உயா்த்தும். எனவே, உங்களை முன்னிலைப்படுத்த தடையாக உள்ள தயக்கம், அச்சம், பயம் போன்றவற்றை விட்டுவிடுங்கள். சமூகத்தில் பல்வேறு கவனச் சிதறல்கள் இருந்தாலும், ஒழுக்கம், கற்றலை இருகண்களாகக் கருதி வெற்றிப் பாதையில் முன்னேறுங்கள் என்றாா்.
முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி.நடராஜன் சிறப்பு விருந்தினரை கெளரவித்தாா். இதில் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் கே.கே.ராமசாமி, (நிா்வாகம்), கே. செந்தில் (நிா்வாகம்), கிருஷ்ணமூா்த்தி (ஆராய்ச்சி), முதன்மையா் ஜெயலெட்சுமி, பாவை பொறியியல் கல்லூரி முதல்வா் பிரேம்குமாா், பாவை புதுமை படைப்பாக்க மையப் பொறுப்பாளா் கமலா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். முடிவில் தாளாளா் மங்கை நடராஜன் நன்றி கூறினாா்.
படவரி...
சிறப்பு விருந்தினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.க்கு நினைவுப் பரிசளித்து கெளரவித்த கல்வி நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன்.
