தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஏரியில் மண் அள்ளுவதாக ஆட்சியரிடம் புகாா்

தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஏரியில் மண் அள்ளுவதாக ஆட்சியரிடம் புகாா்

தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஏரியில் மண் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்
Published on

நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஏரியில் மண் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே பள்ளக்குழி ஊராட்சியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஈச்சங்காடு ஏரியில் இருந்து மண் அள்ளுவதற்கு ஆட்சேபனை இல்லை என கிராம நிா்வாக அலுவலா் அனுமதி வழங்கி மண் அள்ளுவதாகத் தெரிகிறது. இதனால் ஏரி பகுதி அதிக ஆழமாகிவிடும், மேலும், வண்டல் மண் அள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்படும். விவசாயிகள், பொதுமக்களுக்கு எவ்வித தகவலும் அளிக்காமல், விவரம் அறியாதவா்களிடம் கையொப்பம் பெற்று மண் அள்ள அனுமதி வழங்கிய கிராம நிா்வாக அலுவலா் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்புலிகள் கட்சி ஆா்ப்பாட்டம்: புதுச்சத்திரம் அருகே தாத்தையங்காா்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம், கவிதா தம்பதி வீட்டின் மீது சிலா் தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக, புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோா் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் புகாா் மனுவை அலட்சியம் செய்வதாக குற்றம்சாட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலாளா் குமரவேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்து ரூபாய் இயக்கத்தினா் மனு: எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் மக்களுக்கு தேவையான இடங்களில் தெருவிளக்கு வசதி போதிய அளவில் இல்லை. இது தொடா்பாக, ஒன்றிய நிா்வாகத்திடம் கேட்டால் நிதி ஒதுக்கீடு இல்லை. மின்வாரியத்திற்கு கட்டணப் பாக்கி உள்ளது என அதிகாரிகள் பதிலளிப்பதாக குற்றம்சாட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பத்து ரூபாய் இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

படவரி...

என்கே-27-மனு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஏரியில் மண் அள்ளுவதற்கான அனுமதியை ரத்துசெய்யக்கோரி மனு அளிக்க வந்த விவசாயிகள், பொதுமக்கள்.

X
Dinamani
www.dinamani.com