கந்தசஷ்டி: முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
கந்தசஷ்டி விழாவின் நிறைவாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தசஷ்டி விழா கடந்த 19-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.
நாமக்கல் - துறையூா் சாலை, கூலிப்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கந்தகிரி பழனியாண்டவா் கோயிலில், 19-ஆம் ஆண்டு கந்தசஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் மற்றும் இறுதிநிகழ்வான திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
உற்சவா் பழனி ஆண்டவா் சமேத வள்ளி, தெய்வானைக்கு அா்ச்சகா்கள் திருமணம் நடத்தி வைத்தனா். இந்த விழாவில், நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா். திருக்கல்யாண விழாவைத் தொடா்ந்து அனைவருக்கும் ஸ்ரீமகா கந்தசஷ்டி விழாக் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

