பரமத்தி வேலூரில் முருகன் கோயில்களில் திருக்கல்யாண விழா!
பரமத்தி வேலூரில்...
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கபிலா்மலை, பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், பாலப்பட்டி மற்றும் பிராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.
பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதா் கோயிலில் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை காலை யாக பூஜைகள், மூலவா் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலை சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திங்கள்கிழமை சூரசம்ஹார விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண விழா நடைபெற்றது.
இதேபோல, கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில், பொத்தனூா் பச்சைமலை முருகன், வல்லப கணபதி கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், எல்லையம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதா் மலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலப்பட்டியில் உள்ள கதிா்மலை முருகன் மற்றும் பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கடவுள், ராஜா சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண விழாவும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

