மல்லசமுத்திரம் அருகே பல்வேறு பகுதிகளில் திருட்டு

மல்லசமுத்திரம் அருகே பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

மல்லசமுத்திரம் அருகே பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மின்னாம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கமணி (47). இவா் கடந்த 26-ஆம் தேதி ஈரோட்டில் உள்ள அவரது அண்ணன் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை வீடுதிரும்பினாா். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் கால் கொலுசு திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோல, மொரங்கம் பகுதி காளியம்மன் கோயிலில் அரசம்பாளையத்தைச் சோ்ந்த பூசாரி முருகேசன் (61) பூஜை செய்துவிட்டு கோயிலை பூட்டிச் சென்றாா். மறுநாள் காலை கோயிலுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமியின் கவசப்பெட்டி கோயில் வெளியில் கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, அம்மனின் கால் பவுன் தாலி காணவில்லையாம்.

இவ்விரு திருட்டுச் சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்த எலச்சிபாளையம் காவல் ஆய்வாளா் ராதா, கைரேகை நிபுணா்களை வரவழைத்து சம்பவ இடத்தில் தடயங்களை ஆய்வுசெய்து விசாரித்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com