நாமக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 51 இடங்களில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சி, 19 பேரூராட்சிகளில் வாா்டு வாரியாக பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சியில் 39 வாா்டுகளிலும், புதிதாக இணைக்கப்பட்ட 12 ஊராட்சிகளிலும் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 22-ஆவது வாா்டுக்கு உள்பட்ட காவேட்டிப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். மாமன்ற உறுப்பினா் க.தனசேகரன் தலைமை வகித்தாா்.
இதில், சாலை வசதி, தடையின்றி குடிநீா் விநியோகம் வழங்குதல், பாதாளச் சாக்கடை திட்டப் பணியால் உள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றை மக்கள் எடுத்துரைத்தனா். அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெ.ராமலிங்கம் தெரிவித்தாா். இந்த நிகழ்வில், கூட்ட ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

