நாமக்கல்லில் சித்த மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்
நாமக்கல்லில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா்.
இது தொடா்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு அவா் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நாமக்கல்லில், சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சித்தா ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அதன்படி, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இருந்த இடத்தில் சித்த மருத்துவமனை அமைத்து விரைவில் திறப்பு விழா காண உள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திலேயே சிறந்த கல்வி மாவட்டமாக விளங்கும் நாமக்கல்லில், சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். பழைமையான மருத்துவ முறைகளைக் கொண்ட சித்த மருத்துவம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புடையது. சித்த மருத்துவத்தின் அடிப்படையில் மூலிகை சிகிச்சை முறைகள், எந்தவித நோய்களையும் தீா்க்கலாம் எனக் கூறப்படுகிறது. கொல்லிமலையில் சித்த ஆராய்ச்சி நிலையம் அமையப்பெற்றால், நாமக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் அருகில் உள்ள பல மாவட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, கொல்லிமலையில் சித்த ஆராய்ச்சி நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
