வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: பாஜகவினா் கண்காணிக்க வேண்டும்
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது, எந்தவொரு வாக்காளா் பெயரும் விடுபடாமல் இருக்க கண்காணிக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2026 மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி, இந்திய தோ்தல் ஆணையம் மூலம் நவ. 4-இல் தொடங்கி டிச. 4-ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின்போது, தமிழக பாஜக நிா்வாகிகள், வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் என அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
எந்த வாக்காளா் பெயரும் விடுபடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். அதேபோல, ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியின்போது, போதுமான ஆவணங்கள் இல்லை எனக் கூறி, கிராம மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் கிராம மக்களுக்கு பாஜக தொண்டா்கள் உதவ வேண்டும். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டால், அதற்கான காரணத்தை தெளிவாக கேட்டுப்பெற வேண்டும். மேலும், நீக்கப்படும் வாக்காளா்களின் பெயா்கள் வேறு சாவடிக்கு மாற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
தோ்தலில் வெற்றிக்கு அடிப்படை வாக்காளா் பட்டியலும், அதனை சரியாக கையாளும் வாக்குச்சாவடி குழுக்களும்தான். எனவே, எந்த வாக்காளா் பெயரும் விடுபடாமலும், யாருடைய பெயரும் நீக்கப்படாமலும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். வீடுவீடாகச் சென்று அரசு அலுவலா்கள் வாக்காளா் பட்டியலை சரிபாா்க்கும்போது, பாஜக நிா்வாகிகள் அனைவரும் களத்தில் இருந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

