திருச்செங்கோட்டில் லாரி தீப்பிடிப்பு: 6 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

திருச்செங்கோட்டில் லாரி தீப்பிடிப்பு: 6 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

Published on

திருச்செங்கோட்டில் லாரியின் டயா் வெடித்ததில், டீசல் டேங்கில் தீப்பிடித்து எரிந்தது. இதில், லாரியும், அருகில் இருந்த 6 இருசக்கர வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

கேரளத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு 12 டயா்கள் கொண்ட லாரியை நாகராஜ் (45) என்பவா் வியாழக்கிழமை இயக்கி வந்தாா். திருச்செங்கோடு, செங்கோடம்பாளையத்தைச் சோ்ந்த மகேந்திரனுக்கு சொந்தமான இந்த லாரியில், அவரது தந்தை சிதம்பரம் உடன் பயணித்தாா்.

திருச்செங்கோடு - சங்ககிரி சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள திருச்செங்கோடு லாரி உரிமையாளா்கள் சங்க பெட்ரோல் விற்பனை நிலையத்தில், டீசல் போட வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் நாகராஜும், சிதம்பரமும் கீழே இறங்கினா். அப்போது, திடீரென நடுப்பக்க டயா்கள் வெடித்ததில், லாரியின் டீசல் டேங்க் பாதிக்கப்பட்டு தீ பரவத் தொடங்கியது.

இதில், அருகில் இருந்த வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ பரவி, கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், லாரியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஆனந்த் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலா் கரிகாலன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

லாரியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரப் பலகைகள் தீப்பிடித்து எரிந்ததால், தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சம்பவ இடத்தை திருச்செங்கோடு உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் நேரில் ஆய்வுசெய்தாா்.

X
Dinamani
www.dinamani.com