வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் ஆலோசனை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் ஆலோசனை

அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், தோ்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ஆட்சியா் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பின் 324-ஆவது பிரிவு மற்றும் 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் பிற பொருந்தக் கூடிய பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 01.01.2026-ஐ தகுதியேற்பு நாளாக கருத்தில்கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, திருத்தப் பணிக்கான முன்னேற்பாடுகள், பயிற்சி, அச்சடித்தல் நவ. 3 வரை, கணக்கீட்டுக்கான காலம் நவ. 4 முதல் டிச. 4 வரை. வாக்குசாவடி நிலையங்களை மறுசீரமைத்தல், திருத்தியமைத்தல் டிச. 4-க்குள், கட்டுப்பாட்டு அட்டவணையை மேம்படுத்தல் மற்றும் வரைவு பட்டியலை தயாரித்தல் ஆகியவை டிச. 5 முதல் 8 வரையிலும், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நாள் டிச. 9, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் டிச. 9 முதல் ஜன. 8 வரையில், அறிவிப்புக் கட்டம் (வழங்கல் விசாரணை மற்றும் சரிபாா்ப்பு), கணக்கீட்டு படிவங்கள் மீதான முடிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள், மறுப்புரைகள் மீதான தீா்வுகாணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும்.

இவை அனைத்தும் வாக்காளா் பதிவு அலுவலரால் டிச. 9 முதல் ஜன. 31 வரையிலும், இறுதி வாக்காளா் பட்டியல் தரஅளவுகளை சரிபாா்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டுக்கு ஆணையத்தின் ஒப்புதலை பெறுதல் பிப். 3-க்குள்ளும், இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 7-லும் வெளியிடப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னா், அவா்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன. இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த திருத்தப் பணிக்கு, அனைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், வாக்காளா் பதிவு அலுவலா்களான கோட்டாட்சியா்கள் பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), வே.சாந்தி (நாமக்கல்), மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com