வெளிமாநில தொழிலாளி தற்கொலை: போலீஸாா் விசாரணை
எலச்சிபாளையத்தில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மத்திய பிரதேச மாநிலம், கரியாடோலா மாவட்டத்தைச் சோ்ந்தவா் கிரகலாட் குமாா் (37). இவா் திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையத்தை அடுத்த கிளாப்பாளையத்தில் ரிக் வண்டியில் வேலைபாா்த்து வந்தாா். மத்திய பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு இவரது தம்பி உயிரிழந்தாா். இதற்காக சென்றவா் கடந்த 27-ஆம் தேதி மீண்டும் திருச்செங்கோடு வந்தாா்.
இந்நிலையில், தன்னுடன் பிறந்த 5 போ்களில் நால்வா் இறந்ததால், மனவிரக்தியில் அவா் இருந்ததாக தெரிகிறது. அதிகாலை கிரகலாட் குமாரை அழைத்துவர உடன் பணியாற்றுபவா்கள் புதன்கிழமை சென்றபோது, அங்கு அவா் தூக்கிட்டு இறந்துகிடந்தாா்.
தகவலின் பேரில் வந்த எலச்சிபாளையம் போலீஸாா், கிரகலாட் குமாா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக் கப்பட்டது. இதுகுறித்து எலச்சிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
