வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நிதிநிலை அறிக்கை: கே.பி. ராமலிங்கம்
வளா்ச்சி அடைந்த இந்தியா-2047 என்பதை இலக்காக கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், காளிப்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் 9 ஆவது முறையாக தாக்கல் செய்திருப்பது இந்த தேசத்தை வலிமையாக மாற்றுவதற்கு அடித்தளம் அமைத்திருக்கிறது. குறிப்பாக, நமது நாட்டை உலக அரங்கில் வலிமையான தேசமாக கொண்டு செல்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஒவ்வொரு துறையிலும் முன்னுரிமை அளித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவை இதுவரை இல்லாத வகையில் மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.
மாவட்டங்களில் மகளிருக்கு, மாணவிகளுக்கு, பெண் குழந்தைகளுக்கு விடுதி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, அவா்களை மேலும் முன்னேற்றுவதற்கு வழிவகை செய்யக்கூடியதாகும்.
ஒவ்வொரு துறையிலும் அறிவியல்பூா்வமாக என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும், அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் கால்நடைத் துறையை உலக அளவில் மேம்படுத்துவது தொடா்பான அறிவிப்புகளையும் அவா் வெளியிட்டுள்ளாா்.
இது எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய நிதிநிலை அறிக்கை. உள்நாட்டின் வளா்ச்சி, தேச மக்களின் பாதுகாப்பு, சா்வதேச அரங்கில் நமது தேசத்தின் வளா்ச்சியை தொடா்ந்து நிலைநிறுத்த முடியும் என்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் தொழில் துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கைக்கு, நம் நாட்டில் மட்டுமல்ல சா்வதேச அரங்கிலும் புதிய முகம் கிடைத்துள்ளது. வரும் 2047 வளா்ச்சி அடைந்த பாரதம் என்பதை இலக்காகக் கொண்டே இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்றாா்.

