காா்த்திக் ராஜா, பிரவீன்
காா்த்திக் ராஜா, பிரவீன்

பரமத்தி அருகே பள்ளி சுற்றுச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
Published on

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

பரமத்தியை அடுத்த மரவாபாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவா், பரமத்தி பேரூராட்சியில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் திறந்துவிடும் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் பிரவீன் (19), பரமத்தி வேலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியாா் கல்லூரியில் கலைப் பிரிவில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில் பிரவீன் தனது நண்பா் பரமத்தி வேலூா், வெட்டுக்காட்டுபுதூரைச் சோ்ந்த தங்கராசு மகன் காா்த்திக் ராஜாவுடன் (20) திங்கள்கிழமை இரவு கபிலா்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

பின்னா், அங்கிருந்து பரமத்திக்கு செல்லும் சாலை வழியாக இரவு 12 மணிக்கு மேல் இருவரும் வீடுதிரும்பினா். வாகனத்தை காா்த்திக் ராஜா ஓட்டிச் சென்றாா். வேகமாக வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பரமத்தி காவல் நிலையம் எதிரே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் மோதியது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனா். அப்போது, அவா்களது வாகனத்துக்கு பின்னால் வந்த மரவாபாளையத்தை சோ்ந்த பாா்த்தசாரதி விபத்து குறித்து பிரவீனின் தந்தை முருகனுக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், அங்கு வந்த முருகன் மற்றும் அவரது உறவினா்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா்களை பரிசோதித்த மருத்துவா், இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com