ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல்

நாமக்கல் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் நடைபெற்று வருவதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல்
Updated on

நாமக்கல் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் நடைபெற்று வருவதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயை பெருக்கவும், தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உளுந்து, பாசிப்பயறுகளை மத்தியஅரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

உள்ளூா் சந்தைகளில் உளுந்து கிலோ ரூ. 87 முதல் ரூ. 95 வரையிலும், பாசிப்பயறு கிலோ ரூ. 86 முதல் ரூ. 91 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து கிலோ ரூ. 78, பாசிப்பயறு கிலோ ரூ. 87.68 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், பாசிப்பயறு கொள்முதல் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் நடைபெறுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள், தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, நாமக்கல்- 95666 47333, திருச்செங்கோடு 94425 86421 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களுக்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மாா்ச் 25 ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com