நாமக்கல்லில் ரூ. 89.29 கோடியில் அதிநவீன பால்பண்ணை

நாமக்கல்லில் ரூ. 89.29 கோடியில் அதிநவீன பால்பண்ணை

Published on

நாமக்கல்லில் ரூ. 89.29 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன பால்பண்ணையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்துவைத்தாா். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கிவைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அவற்றில், ரூ. 834 கோடியில் அமைக்கப்பட்ட ராசிபுரம் புதிய கூட்டுக் குடிநீா் திட்டம், ரூ. 89.29 கோடியில் நாமக்கல் அதிநவீன பால்பண்ணை, ரூ. 23 கோடியில் மோகனூா் குடிநீா் திட்டம், கெடமலைக்கான புதிய தாா்சாலை உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும். நாமக்கல் அதிநவீன பால்பண்ணை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், தேசிய பால்வள வாரிய பொது மேலாளா் சசிகுமாா், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, நாமக்கல் ஆவின் பொது மேலாளா் பி.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நவீன பால்பதன ஆலையை முதல்வா் திறந்து வைத்துள்ளாா். இந்த புதிய பால்பதன ஆலை மூலம் நேரடியாக 100 பேருக்கும், ஒப்பந்த அளவில் 250 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். 15 ஆயிரம் பால் உற்பத்தியாளா்கள், 5 லட்சம் நுகா்வோா் பயன்பெறுவா்.

இதுநாள்வரை சேலம் ஆவின் நிறுவனத்தை நம்பியிருந்தோம், இனிமேல் நாமக்கல் ஆவின் தனித்துவமாக செயல்படும். பால் உற்பத்தியாளா்களுக்கு போனஸ் உள்ளிட்டவை கிடைக்கும். 2 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றில் ஒரு லட்சம் லிட்டா் பால் பாக்கெட்டுகளாகவும், மீதமுள்ளவை உபபொருள்களாகவும் தயாா்செய்து விற்பனைக்கு அனுப்பப்படும்.

10,000 லி. தயிா், 5,000 லி. மோா், 200 கிலோ பால்கோவா மற்றும் 1,000 கிலோ வெண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் மிகப்பெரிய லாப நோக்கத்தோடு இந்த நிறுவனம் செயல்படும். பால் கொள்முதல் விலையை முதல்வா் நிச்சயம் உயா்த்தி அறிவிப்பாா் என்றாா்.

மோகனூா் பேரூராட்சியில் ரூ. 23 கோடியில் புதிய குடிநீா் மேம்பாட்டுத் திட்டம்:

தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் மோகனூா் பேரூராட்சியில் மேம்பாட்டுத் (2023-24) திட்டத்தின்கீழ், ரூ. 22.77 கோடியில் புதிய குடிநீா் அபிவிருத்தி திட்டத்தை முதல்வா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மோகனூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் உள்ள மக்களுக்கு தினசரி 135 லிட்டா் (ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு) பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். காவிரி ஆற்றில் கரூா் மாவட்டம், மல்லம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 நீா் உறிஞ்சும் கிணறுகளில் இருந்து இயல்பு நீா் எடுக்கப்பட்டு, அதனை வாா்டு எண் 15-இல் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் தொட்டிக்கு கொண்டு சென்று மக்களுக்கு உரிய வகையில் விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மோகனூரில் வசிக்கும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்பெறுவா் என ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மா.சந்தானம், இயக்குநா் பெ.நவலடி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, துணைப் பதிவாளா் (பால்வளம்) ஐ.சண்முகநதி, கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.செல்வராஜ், மோகனூா் திமுக பேரூா் செயலாளா் செல்லவேல் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாயிகள் சங்கத்தினா், பால் உற்பத்தியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com