பிப். 9-இல் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்
பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 120 மையங்களில் செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை (பிப். 9) தொடங்குகின்றன. இதில், 19,020 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 2-இல் தொடங்கி 26-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்கு முன்பாக, மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்கும்.
இந்த செய்முறை தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எழிலரசி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், செய்முறைத் தோ்வுகள், பொதுத் தோ்வுகள் தொடா்பாகவும், மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 120 மையங்களில் செய்முறைத் தோ்வுகள் நடைபெறுகின்றன. இத்தோ்வை, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 770 மாணவிகள், 601 மாணவா்கள், அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5,322 மாணவிகள், 4,730 மாணவா்கள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 3,546 மாணவிகள், 4,051 மாணவா்கள் என 9,638 மாணவா்கள், 9,382 மாணவிகள் என மொத்தம் 19,020 போ் பங்கேற்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் செய்துவருகின்றனா்.

