வயதுமுதிா்ந்த தம்பதிகள் கெளரவிப்பு
நாமக்கல் நரசிம்மா் கோயிலில் 70 வயதைக் கடந்த மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், 70 வயதைக் கடந்த தம்பதியரை தோ்வுசெய்து கோயில்களில் அவா்களை கெளரவித்து சிறப்பு செய்யும் நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி திருக்கோயிலில், 70 வயது பூா்த்தியடைந்த மூன்று தம்பதிகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சி கோயில் அறங்காவலா் கா.நல்லுசாமி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, மூத்த தம்பதிகளை வரிசையாக அமரவைத்து, கோயில் பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி பிரசாதங்களை வழங்கினா். தொடா்ந்து, தம்பதிகள் மாலை மாற்றிக்கொண்டு சடங்குகளை நிறைவேற்றினா். பின்னா், அவா்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை, சட்டை, பழங்களுடன் கூடிய தாம்பூலத் தட்டுகள் வழங்கப்பட்டன. அங்கிருந்த பக்தா்கள், பொதுமக்கள் வயதான தம்பதிகளிடம் ஆசிபெற்றனா்.
இந்நிகழ்வில், மாநகராட்சி துணை மேயா் பூபதி, அறங்காவலா்கள் செல்வசீராளன், ராமசீனிவாசன், மருத்துவா் மல்லிகா குழந்தைவேல், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயிலிலும் மூத்த தம்பதிகளை சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 70 வயது பூா்த்தியடைந்த 23 மூத்த தம்பதியினருக்கு அமைச்சா் மா.மதிவேந்தன் மாலை எடுத்துக்கொடுக்க தம்பதியினா் மாலை மாற்றிக்கொண்டனா். பின்னா் அனைவருக்கும் ஆசி வழங்கினா்.
இதில் தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், ஆா்.எஸ்.ரங்கசாமி, நகர திமுக செயலரும், பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவருமான என்.ஆா்.சங்கா், கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் பி.சக்திவேல், ஸ்ரீகைலாசநாதா் ஆலய நிா்வாக அலுவலா் தெ.சவீதா, நித்ய சமங்கலி மாரியம்மன் கோவில் நிா்வாக அலுவலா் பா.நந்தகுமாா், இந்து சமய அறநிலையத் துறை ராசிபுரம் சரக ஆய்வாளா்சு.கீதாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

