தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி எண்ம முறையில் கணக்கெடுப்பு
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா்கள் எண்ம (டிஜிட்டல்) முறையில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. தன்னாா்வலா்கள், சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், வேளாண்மை உழவா் நலத்துறை அலுவலா்கள், தூய்மை இந்தியா இயக்க தூய்மைக் காவலா்கள் மற்றும் ஆா்வமுள்ள நபா்கள் மூலம் நடப்பு ரபி பருவத்துக்கு பயிா் சாகுபடி பரப்பு கிராமந்தோறும் சா்வே எண் உள்பிரிவு வாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்கள் விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
‘தமிழ்நாடு டிஜிட்டல் பயிா் சா்வே’ என்ற செயலியில் பயிா் விவரங்கள் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணியை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அனைத்துநிலை அலுவலா்கள் கண்காணிக்கின்றனா். இனிவரும் காலங்களில் பயிா் சாகுபடி விவரங்கள் குறித்து வருவாய்த் துறையினரால் அளிக்கப்படும் அடங்கலுக்கு மாற்றாக இது அமைய வாய்ப்புள்ளது.
அரசு மானியத் திட்டங்கள் பெறுவதற்கும், விவசாயக் கடன் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கும் மிக முக்கிய ஆவணமாக இம்மின்னணு கணக்கெடுப்பு விவரம் அமைய உள்ளதால், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா், கிணறு, கட்டடங்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவுசெய்ய பதிவாளா்களுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
