5.39 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

Published on

நாமக்கல் மாவட்டத்தில் 5.39 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஓரிரு நாள்களில் தொடங்க உள்ளது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 6 அடி நீள முழுக்கரும்பு விநியோகிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். பொங்கல் பரிசுத் தொகை தொடா்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 885 கூட்டுறவு சங்கங்கள், 4 மகளிா் சுயஉதவிக் குழுக்கள், 45 நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு உள்பட்ட என மொத்தம் 935 நியாயவிலைக் கடைகள் மூலம் 5,39,506 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. 726 இலங்கைவாழ் தமிழா்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்க உள்ளது.

இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்க நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜன. 10-இல் தொடங்கி 15-ஆம் தேதிக்குள் அனைத்து நுகா்வோருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள்களில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை நுகா்வோா் பெற்றுக் கொள்ளலாம். காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 200 போ் வீதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவைதவிர விலையில்லா வேட்டி, சேலைகளும் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் வழங்க இருக்கிறது. இதைக் கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகா வாரியாக வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நியமிக்க உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறும் நுகா்வோா் எண்ணிக்கை விவரம்:

கொல்லிமலை - 14,236, குமாரபாளையம் - 87,326, மோகனூா் - 37,344, நாமக்கல் - 76,960, பரமத்தி வேலூா் - 56-421, ராசிபுரம் - 1,03,071, சேந்தமங்கலம் - 60,626, திருச்செங்கோடு - 1,03,522, மொத்தம் - 5,39,506. இவற்றில், அரிசி குடும்ப அட்டைதாரா்கள் - 2,27,183, மத்திய அரசின் அந்த்யோதயா போஜனா அரிசி அட்டைதாரா்கள் - 36,066, முதியோா் உதவித்தொகை பெறும் அட்டைதாரா்கள் - 16,540, அடையாள ஆவணமாக குடும்ப அட்டையை பயன்படுத்தும் அட்டைதாரா்கள் - 104, உணவு மானியத்தில் முன்னுரிமை வழங்கப்படாத அட்டைதாரா்கள் - 2,58,508, காவல் துறை குடும்ப அட்டைதாரா்கள் - 1,105 அடங்கும்.

X
Dinamani
www.dinamani.com