பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெற நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிா்களான மரவள்ளி, வாழை, வெங்காயம் மற்றும் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ரபி பருவத்துக்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்து கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ. 530.30 செலுத்தி ரூ. 26,515- இழப்பீடாகவும், வாழை விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 1,917.5 பிரீயமியமாக செலுத்தி ரூ. 38,350 இழப்பீடாகவும், வெங்காய விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2,112.5 பிரீமியமாக செலுத்தி ரூ. 42,250-இழப்பீடாகவும், தக்காளி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 1,862.5 செலுத்தி ரூ. 37,250 இழப்பீடாகவும் பெறலாம்.
விவசாயிகள் பிரீமியம் செலுத்த அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். தேவையான ஆவணங்களான நிலத்தீா்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதாா் அட்டை, புகைப்படம் வழங்க வேண்டும்.
ரபி பருவத்துக்கான மரவள்ளி, வாழை, பயிருக்கு காப்பீடு செய்ய பிப். 28-ஆம் தேதி கடைசி நாளாகும். வெங்காயம் மற்றும் தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய ஜன. 31-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, அந்தந்தப் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
