குளிா்காலத்தில் நாய்களை தாக்கும் வைரஸ்: நோய்க்கான தடுப்பூசி செலுத்திட அறிவுறுத்தல்

குளிா்காலத்தில் நாய்களை வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதால், உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

குளிா்காலத்தில் நாய்களை வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதால், உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 87.8 டிகிரி மற்றும் 71.6 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 86 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: குளிா்காலத்தில் நாய்களை ‘கெனைன் டிஸ்டெம்பா்’ எனப்படும் வலிப்பு நோய் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. இந்த நோய் அனைத்து வயதான நாய்களையும் தாக்கும் வல்லமை கொண்டது. இருப்பினும் 6 வயதிற்கு குறைவாக உள்ள நாய்களை அதிகமாகத் தாக்கும் சூழல் உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்படும் நாய்களில் 88 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்தாத நாய்களாகும். காய்ச்சல், உணவு உண்ணாமை, கண்களில் பூழை வடிதல், வாந்தி, ரத்தம் கலந்த பேதி, மூக்கில் சளி வடிதல், அடி வயிற்றில் கொப்புளங்கள் தோன்றுதல், வலிப்பு ஏற்படுதல், கீழ்த்தாடை படபட வென்று அடித்துக் கொள்ளுதல், நடக்க முடியாமல் போதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். வலிப்பு போன்ற நரம்பு மண்டல அறிகுறிகள் காணப்பட்டால் பாதிக்கப்பட்ட நாய்கள் பெரும்பாலும் இறந்து விடும். இந்நோய்க்கு சிகிச்சை அளித்தாலும் பெரும்பாலும் அவை பலனளிப்பதில்லை. நாய்களுக்கு தடுப்பூசி அளிப்பதே நோயைத் தடுக்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.

இந்த நோயைத் தடுப்பதற்கு முதல் நடவடிக்கையாக நாய்க்குட்டிகளை ஒன்றரை மாத வயதிற்குப் பிறகுதான் (45- ஆவதுநாள்) தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். தாயிடமிருந்து பிரிப்பதற்கு முன்பாக நாய்க்குட்டிகளின் 42 ஆம் நாளில் பாா்வோ வைரஸ், கெனைன் டிஸ்டெம்பா், எலிக்காய்ச்சல், இன்பெக்சியஸ் கெனைன் ஹெபடைடிஸ் மற்றும் கெனைன் பாரா இன்புளுயன்சா நோய்க்கான கூட்டு தடுப்பூசியை செலுத்த வேண்டும். அதன்பிறகு 21 நாள்கள் அல்லது மூன்று வாரங்கள் இடைவெளியில் இரண்டுமுறை தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி அளிப்பதற்கு முன்பாக நாய்க்குட்டிகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com