சாலைகளில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில், பொது இடங்கள், சாலையோரங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை அமைக்கக்கூடாது என்று ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவுப்படி, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையால் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் சங்கங்கள், இதர அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த விழா ஏற்பாட்டாளா்கள் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன்பாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும். மனுவை பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் கோட்ட அளவிலான குழுவினரால் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.
உரிய அனுமதி இல்லாமல் தற்காலிக கொடிக்கம்பங்களை அமைப்போா் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
