சொந்த நிலத்தில் பனைமரத்தை வெட்டிய விவசாயி: லஞ்சம் கேட்டு கைதான விஏஓ
திருச்செங்கோடு அருகே புதுப்புளியம்பட்டி கிராமத்தில் அனுமதி இன்றி பனைமரம் வெட்டிய விவசாயி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உள்பட மூவரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதுப்புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி செந்தில்குமரன் (40). இவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 6 பனைமரங்களை அனுமதியின்றி வெட்டியது தொடா்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக புதுப்புளியம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இதுதொடா்பாக முதல்கட்டமாக ரூ.20 ஆயிரத்தை செந்தில்குமரன் கொடுத்துள்ளாா். இரண்டாவது கட்டமாக பணத்தை கொடுக்க முடியாமல் தடுமாறியபோது, கட்டாயப்படுத்தி விஏஓ குணசேகரன் கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அவா்மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரபுவிடம் செந்தில்குமாா் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி செந்தில்குமரனிடம் கொடுத்து அனுப்பினா். விஏஓ குணசேகரனை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, அவா் தான் வெளியில் இருப்பதாகவும், சி.பி.ஹெச். காலனியில் உள்ள கிராம உதவியாளா் தேவியிடம் பணத்தை கொடுத்துவிடுமாறும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து தேவியை தொடா்புகொண்டபோது, அவா் தனது கணவா் விஜயகுமாா் அருகில் உள்ள தேநீா் கடையில் நின்று கொண்டிருப்பதாகவும் அவரிடம் பணத்தை கொடுத்துவிடும்படியும் கூறினாா்.
அப்போது வீட்டுக்கு வந்த கிராம உதவியாளா் தேவியின் கணவா் விஜயகுமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்தில்குமரன் அளித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் அவரை பிடித்தனா். இதையடுத்து விஏஓ குணசேகரன், கிராம உதவியாளா் தேவி, அவரது கணவா் விஜயகுமாா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கைது செய்து, திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

