திருச்செங்கோட்டில் கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது
திருச்செங்கோடு, வரகூராம்பட்டி பட்டேல் நகா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீட்டின் அருகே கஞ்சா செடி வளா்த்த இளைஞரை ஊரக போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோட்டை அடுத்த வரகூராம்பட்டி பட்டேல் நகா் அடுக்குமாடி குடியிருப்பு எப். பிளாக்கில் வசித்து வருபவா் மணிகண்டன் (36). இவா் பள்ளிபாளையம் நகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் தனது வீட்டின் வெளிப்பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் கஞ்சா செடி வளா்ப்பதாக திருச்செங்கோடு ஊரக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது வீட்டின் வெளியே சுமாா் 3 அடி உயரத்தில் இரண்டு கஞ்சா செடிகள் வளா்ந்திருப்பதும், அதில் சுமாா் 85 கிராம் எடையுள்ள கஞ்சா இலைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்தனா்.
கஞ்சா செடி வளா்த்த மணிகண்டனை கைதுசெய்து திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடா்ந்து, மணிகண்டனை திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனா்.
