நாமக்கல் வேட்டாம்பாடியில் இரண்டு புதிய புறவழிச் சாலைகளை புதன்கிழமை திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு. உடன், அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி, வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
நாமக்கல் வேட்டாம்பாடியில் இரண்டு புதிய புறவழிச் சாலைகளை புதன்கிழமை திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு. உடன், அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி, வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்; 650 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்; 650 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழக விரிவான சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் புறவழிச் சாலை திட்டம் 23 கி.மீ. தொலைவுக்கு ரூ. 400 கோடியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக முதலைப்பட்டி முதல் புதிய பேருந்து நிலையம் வரை பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதையடுத்து, மரூா்பட்டி முதல்- வேட்டாம்பாடி வரை, வேட்டாம்பாடி முதல்- வசந்தபுரம் வரை ரூ. 95.12 கோடியில் இரண்டு புறவழிச் சாலைகள் முடிவுற்ற நிலையில், மாநில பொதுப் பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை வேட்டாம்பாடியில் நடைபெற்ற விழாவில் சாலைகளை திறந்துவைத்தாா். மேலும், வசந்தபுரம் முதல் லத்துவாடி, லத்துவாடி -முதல் வள்ளிபுரம் வரை ரூ. 103 கோடியில் இரு புறவழிச் சாலைகள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினாா்.

இந்த விழாவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய சாலை திட்டப் பணிகளை தொடங்கிவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

2021-இல் திமுக ஆட்சியமைந்தபோது நெடுஞ்சாலைத் துறையை என்னிடம் வழங்கிய முதல்வா், கிராமப்புற மக்கள் நலனுக்கான சாலைகளை அமைக்க வேண்டும் என்றாா். அதன்படி, தமிழகத்தில் 2,000 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 650 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 1,281 தரைப்பாலங்கள் உள்ளன. இந்த இடங்களில் உயா்நிலை பாலம் அமைக்க முதல்வா் உத்தரவிட்டாா். அவற்றில், 1,100 உயா்நிலை பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 59 பாலங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 22 பாலங்களுக்கு நிதித் துறையில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களவை உறுப்பினா் மாதேஸ்வரன், பரமத்தி வேலூா் - ஜேடா்பாளையம் இருவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாா். அதற்கான திட்ட மதிப்பீடு தயாா்செய்து நான்குவழிச் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல்லில் புதிய புறவழிச்சாலைகள் தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு இந்த புதிய சாலைகள் வலுவுடன் இருக்கும்.

நாமக்கல் புறவழிச் சாலை முழுமை பெறுவதற்கு மரூா்பட்டியில் கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடைய வேண்டும். ரூ. 119 கோடியில் 5 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 35 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் முடிவுற்று ஜூலை மாதம் ரயில்வே பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கோழி மற்றும் முட்டை உற்பத்தி மாவட்டங்களில் நாமக்கல் முதன்மையாக விளங்குகிறது. லாரிகளுக்கான கூண்டுகட்டும் தொழில், கோழிப் பண்ணைகள், விவசாயம், சுற்றுலா என பல்வேறு வாய்ப்புகளை இந்த மாவட்டம் கொண்டுள்ளது. அதனால்தான் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புறவழிச் சாலையால் நாமக்கல் நகருக்குள் நெரிசல் குறைந்து, விபத்து தவிா்க்கப்படுவதோடு, சுற்றுப்புற கிராமங்கள் அனைத்தும் பயன்பெறும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், துணை மேயா் செ.பூபதி, தலைமைப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) பி.செந்தில், கண்காணிப்புப் பொறியாளா் என்.எஸ்.சரவணன், கோட்டப் பொறியாளா் கே.அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com