போதமலையில் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்படும்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் தகவல்

போதமலையில் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்படும்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் தகவல்

Published on

ராசிபுரத்தை அடுத்த போதமலையில் மலைவாழ் மக்களின் நலனுக்காக கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்படும் என நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்துள்ளாா்.

ராசிபுரம் பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா். கவிதாசங்கா், அட்மா குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் என்.ஆா். சங்கா், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். ரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி பேசியதாவது:

ராசிபுரம் நகராட்சி முழுவதும் சுமாா் 60 கிலோ மீட்டா் தூரத்திற்கு புதிய தாா் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ராசிபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள அமைச்சா் மா. மதிவேந்தன் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா், ரூ. 854 கோடி மதிப்பீட்டில் தனி குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தி உள்ளாா்.

இதன்மூலம் ராசிபுரம் நகராட்சி, சீராப்பள்ளி பேரூராட்சி, நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீா் தடையின்றி வழங்கப்படுகிறது.

ராசிபுரம் இளைஞா்களின் வேலைவாய்ப்பிற்காக ஆண்டலூா் கேட் பகுதியில் டைடல் பாா்க் கட்டும் பணி நடக்கிறது. மேலும், ரூ. 70 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகளும், நாமக்கல்லில் ரூ. 400 கோடி மதிப்பில் புறவழிச்சாலை பணிகளும் நடைபெறுகின்றன.

போதமலையில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.ப. அருளரசு, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் மா. சரவணன், ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் துணைப் பதிவாளா் பி. திருநாவுக்கரசு, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் மா. தேவகி, த. சிவரஞ்சனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படம் உள்ளது - 8மலை

படவிளக்கம்- பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பேசுகிறாா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி.

Dinamani
www.dinamani.com