வெப்படையில் செம்பு கம்பிகள் திருடிய நால்வா் கைது
பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதி சூரிய மின் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதன தொழிற்கூடத்தில் செம்பு கம்பிகள் திருடிய நான்கு பேரை வெப்படை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெப்படை லட்சுமிபாளையம் பகுதியில் பாலாஜி என்பவரின் சூரிய மின் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் உள்ளது. தொழில்கூடத்தில் 200 கிலோ எடைகொண்ட சில லட்சம் மதிப்புள்ள செம்புகம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருட்டு சம்பவம் குறித்து தொழிக்கூட உரிமையாளா் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வெப்படை காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் வெப்படை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை வெப்படை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவா்கள் லட்சுமிபாளையம் பகுதிகளில் காப்பா் ஒயா்களை திருடியது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட வெப்படை இலந்த குட்டை பகுதியை சோ்ந்த பழைய இரும்பு வியாபாரி எடிசன்( வயது43),கூலி தொழிலாளி சஞ்சய்( வயது20), மில் கூலி தொழிலாளி ஆரோன் மற்றும் படைவீடு பகுதியை சோ்ந்த ரிக் பட்டறை தொழிலாளி சுபாஷ்( வயது 24) ஆகியோரை வெப்படை காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
