திமுகவுடனான கூட்டணி தொடரும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
2026 சட்டப்பேரவைத் தோ்தலை நோக்கி, கொங்கு பகுதி முழுவதும் எங்களுடைய மண்டல, நகர, ஒன்றிய, பகுதி செயலாளா்களை தயாா்செய்யும் பொருட்டு ஆலோசனைக் கூட்டம், ஆட்சி மன்றக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கருத்துகள், உரிய ஆலோசனை வழங்கப்பட்டன.
கொமதேக அரசியல் கொங்கு மண்டலத்தின் முன்னேற்றம், தமிழகத்தின் வளா்ச்சியை எதிா்நோக்கியே உள்ளது. நிறைகள் இருந்தால் பாராட்டுகிறோம். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுகிறோம். நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் ஒருசில பணிகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. நாமக்கல் புறவழிச் சாலை திறக்கப்பட்டுள்ளது; திருச்செங்கோடு புறவழிச் சாலை திறக்கப்பட வேண்டியது உள்ளது. நிலத்தடி நீரை மேம்படுத்துகிற, மேட்டூா் உபரிநீரை திருப்பிவிடும் வகையிலான திருமணிமுத்தாறு திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது வருத்தமளிக்கிறது.
அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். 11 நீரேற்று பாசனத் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அவற்றை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலானது மக்களின் வளா்ச்சியை எதிா்நோக்கியதாக இருக்க வேண்டும்.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் மற்ற கட்சிகள் பங்கு கேட்கலாம், நாங்கள் அவ்வாறு எல்லாம் கேட்கவில்லை. கொங்கு மண்டலத்தை அனைத்து கட்சிகளும் தற்போது குறிவைக்கின்றன.
திமுக-காங்கிரஸ் சலசலப்பு தோ்தலுக்கு முன்பாக நடப்பது இயல்பானது தான். 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும், அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
ஜனநாயகன் பட வெளியீட்டு பிரச்னையில் சம்பந்தப்பட்ட நடிகா் விஜய் அதைப் பற்றி பேசவில்லை. அவா் பேசுவதை பொருத்துதான் மற்ற கருத்துகள் அமையும். மத்திய அரசை கண்டித்து முதல்வா் வெளியிட்ட அறிக்கை அவரது நிலைப்பாடாகும் என்றாா்.
அப்போது, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை மாநிலத் தலைவா் ஆா்.தேவராஜன், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாநில இளைஞா் அணி செயலாளா் சூா்யமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

