ஜன. 25-இல் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு மாரத்தான்
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வோா் ஆண்டும் ஜன. 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் அந்த தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் நாமக்கல் பூங்கா சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் தொடங்குகிறது.
அங்கிருந்து, கோட்டை சாலை வழியாக உழவா் சந்தை, நரசிம்மா் கோயில், பலபட்டறை மாரியம்மன் கோயில், பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பூங்கா சாலையை வந்தடைய உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிசெய்யும் வகையில் நடைபெறும் இந்த விழிப்புணா்வு மாரத்தான் நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மாரத்தான் போட்டியில் முதலில் வரும் 500 பேருக்கு சான்றிதழ்கள் அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
