குடியரசு தின விழா: ஆட்சியா் தேசியக்கொடி ஏற்றினாா்
நாமக்கல்: குடியரசு தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா்.
நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில், காலை 8.05 மணி அளவில் ஆட்சியா் தேசியக்கொடி ஏற்றினாா். அதன்பிறகு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் அவா் வானில் பறக்க விட்டாா்.
தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவா்களது வாரிசுதாரா்களுக்கு கதா் ஆடை அணிவித்து கெளரவித்தாா். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஆயுதப்படை காவலா்கள், ஊா்க்காவல் படையினருக்கும், காவல்துறை இசைக் குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.
மேலும், குடும்ப நலத் துறை சாா்பில் 2024-25-ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள் மற்றும் குடும்ப நல ஆலோசகா்களை கௌரவித்து சான்றிதழ், கேடயங்களை வழங்கினாா்.
இந்த விழாவில், 53 காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்களும், 33 காவலா்களுக்கு நற்சான்றிதழ்களும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 343 அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ. 64.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் செயல்படும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25-ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10, பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வில் 95 சதவீதத்துக்குமேல் மாணவா்களை தோ்ச்சிபெற செய்த தலைமை ஆசிரியா்கள் மற்றும் 100 சதவீதம் வெற்றிபெற செய்த முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் என 21 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.
குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் 728 போ் பங்கேற்றனா்.
இந்த விழாவில், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தனராசு, அண்ணாதுரை, உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, கோட்டாட்சியா்கள் (நாமக்கல்) சாந்தி, லெனின் (திருச்செங்கோடு), கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள், காவல் துறையினா், மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

