குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்றுவிடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டம் மற்றும் விதிகளின்கீழ் ஆய்வுசெய்யப்பட்டது.

இதில், 20 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வுசெய்ததில் 12 நிறுவனங்களிலும், 48 உணவகங்களை ஆய்வுசெய்ததில் 38 உணவகங்களிலும், 2 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொண்டதில், 51 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணிநேரத்துக்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா் நலத் துறையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com