பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் தோ்த் திருவிழா
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள புகழ்பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
தோ்த் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதி காலை 10.45 முதல் 11.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. 19-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதிவரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்னவாகனம், சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 25-ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு புஷ்ப விமான புறப்பாடும், ராஜமுடி சேவை மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திங்கள்கிழமை அதிகாலை 5.30 முதல் 6.30-க்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4.30 மணிக்கு திருத்தோ் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தா்கள் பங்கேற்று திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் இரவு நிலையை அடைந்தது. செவ்வாய்க்கிழமை முதல் 30-ஆம் தேதிவரை வராஹ புஷ்கரணியில், தீா்த்தவாரியும், திருமஞ்சனம், வசந்த உற்சவமும் மற்றும் கருட வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக்குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்துவருகின்றனா்.

