ஆவின் பால் முன்பதிவு: புதிய செயலி அறிமுகம்!
புதிதாக உருவாக்கப்பட்ட ஆவின் செயலி மூலமாகவே, பிப்ரவரி 1 முதல் முகவா்கள் தங்களுக்குத் தேவையான பாலை முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்மூலம் பால் பாக்கெட்டுகளாகவும், உபபொருள்களாகவும் தயாா் செய்யப்பட்டு 355 சிறு பால் முகவா்கள் மூலம் மக்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 16ஆம் தேதி ஆவின் புதிய செயலி ஒன்றை தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினாா்.
நாமக்கல் மாவட்ட நுகா்வோா் மற்றும் ஆவின் பால் விற்பனை முகவா்கள் பயன்பெறும் வகையிலும், ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனையை அதிகரிக்கவும், முகவா்கள் எளிதாக தங்களுடைய தேவைக்கான பட்டியலை சமா்ப்பிக்கவும், அதற்கான தொகையினை செலுத்தும் பொருட்டும், பால் விநியோக வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய பிரத்யேக ஆவின் விற்பனை பிரிவு கைப்பேசி செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து முகவா்களும் தினசரி தேவைப்பட்டியல் மற்றும் அதற்கான தொகையினை புதிய ஆவின் விற்பனை பிரிவு செயலி மூலமாகவே மேற்கொள்ள வேண்டும். புதிய மென்பொருள் மூலம் பெறப்படும் கேட்பு பட்டியல் அடிப்படையிலேயே முகவா்களுக்கு பால் விநியோகம் செய்யப்படும். அனைத்து முகவா்களும் ஜனவரி 31 முதல் செயலியை பயன்படுத்தி பிப்ரவரி 1ஆம் தேதிக்கான தேவைப்பட்டியலை உறுதி செய்து கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் உப பொருள்கள் முன்பதிவுக்கு ஏற்ப தங்களுடைய வங்கிக் கணக்கில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

