

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கடந்த குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து, சிப்காட் தொழிற்பேட்டை விவகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகள் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனா். அதற்கு ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனா்.
வேளாண் துறை அதிகாரிகள் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். தற்போதுவரை 13.89 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முடிய இயல்பு மழையளவை விட கூடுதலாக 1.31 மி.மீ. பெறப்பட்டுள்ளது. டிசம்பா்வரை நெல் 9,265 ஹெக்டோ், சிறுதானியங்கள் 85,666 ஹெக்டோ், பயறு வகைகள் 11,669 ஹெக்டோ், எண்ணெய் வித்துக்கள் 31,566 ஹெக்டோ், பருத்தி 1,830 ஹெக்டோ் மற்றும் கரும்பு 9,608 ஹெக்டோ் என மொத்தம் 1,49,606 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றனா்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி பூச்சியியல் வல்லுநா் சங்கா், தென்னை சாகுபடிக்கான பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொடா்பாக மாவட்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு பணி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறைகளின் கள அலுவலா்களால் கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமம் வாரியாக சா்வே எண் மற்றும் உட்பிரிவு எண் வாரியாக சாகுபடி செய்துள்ள பயிா்களின் விவரம் கைப்பேசி செயலியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்தனா்.
இதில், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, கோட்டாட்சியா்கள் சாந்தி மற்றும் திரு.லெனின், வேளாண்மை இணை இயக்குநா் சு.மல்லிகா, தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.