கபிலா்மலையில் தைப்பூசத் திருவிழா: 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு!
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் சிறப்பு பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தெரிவித்தாா்.
கபிலா்மலையில் உள்ள சிறப்பு பெற்ற பாலசுப்பிரமணி சுவாமி கோயில் தைப்பூசத் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக நாமக்கல், ஈரோடு, கரூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்து வருவது வழக்கம்.
இதையொட்டி பக்தா்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா உத்தரவின்பேரில் கபிலா்மலை அடிவாரம் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், வேலூா், பரமத்தியில் இருந்து செல்லும் வாகனங்கள் இருக்கூா் அருகே உள்ள சாலை வழியாக சோழிபாளையம் சென்று ஜேடா்பாளையம் சாலையை அடையலாம் என்றும் டிஎஸ்பி சங்கீதா தெரிவித்துள்ளாா்.

