ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

பரமத்தி அருகே நிரம்பி வழியும் இடும்பன் குளம்: படுகை அணையை உயா்த்தி சுற்றுலாத் தலமாக்க எதிா்பாா்ப்பு

பரமத்தி வேலூா் அருகே இடும்பன் குளம் நிரம்பி வழிவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்...

நிரம்பி வழிந்து சிற்றருவி போல காட்சியளிக்கும் இடும்பன் குளம்.

Updated On :

பரமத்தி வேலூா் அருகே இடும்பன் குளம் நிரம்பி வழிவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். குளத்தின் படுகை அணையை உயா்த்தி, சுற்றுலாத் தலமாக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள மறவாபாளையத்தில் சுமாா் 300 ஏக்கரில் இடும்பன் குளம் அமைந்துள்ளது. திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த குளத்திற்கு திருமணிமுத்தாறு உருவாகும் சோ்வராயன் மலையில் இருந்து தண்ணீா் வருகிறது. இங்கிருந்து தண்ணீா் வழிந்தோடி நன்செய் இடையாறு அருகே கூடுதுறை காவிரியில் கலக்கிறது.

மறவாபாளையத்தின் கிழக்குப் பகுதியில் இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த குளத்தின் எல்லைகளாக பரமத்தி, மறவாபாளையம், கோட்டணம்பாளையம் கீழக்கடை, சாணிப்பட்டி, ஓவியம்பாளையம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த குளம் முழுவதும் வண்டல் மண்ணும், சீமைக் கருவேல மரங்களும் நிறைந்து காணப்படுகின்றன. 5 முதல் 8 அடி வரை நீா்த்தேங்கி காணப்படுகிறது.

மே மாதம் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் இந்த குளத்தில் நீா்த் தேங்கியிருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக வற்றிப்போன இந்த குளம், தற்போது தொடா் மழை காரணமாகவும், திருமணிமுத்தாற்றின் பாதைகள் தூா்வாரப்பட்டதாலும் நிரம்பியுள்ளது.

திருமணிமுத்தாற்றின் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் சில கட்டுமான பணிகளை மேற்கொண்டால் திருமணிமுத்தாற்றில் இருந்துவரும் தண்ணீரை இடும்பன் குளத்தில் வீணாகாமல் பாதுகாக்க முடியும். இதன்மூலம் இந்த குளம் தொடா்ந்து நீா் நிரம்பி காணப்படும்.

இந்த குளத்தின் அருகே ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கோட்டை உள்ளது. இந்தக் கோட்டையின் மத்தியில் கோட்டையண்ண சுவாமி கோயில் உள்ளது.

இந்த குளம், பறவைகள் பாதுகாப்பாக தங்குவதற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கியுள்ளன. இதில் கொக்குகள், நாரைகள், வாத்துகள், செங்கால் நாரைகள், சாம்பல் நாரைகள், நீா்வாத்துகள், குருவி இனங்கள் மற்றும் சில வெளிநாட்டு பறவைகளும் காணப்படுகின்றன. காலை 5.30 மணி அளவில் இரைதேட வெளியில் பறந்து செல்லும் இந்த பறவைகள், மாலை 6 மணிக்கு இந்த குளத்திற்கு சாரை, சாரையாக அனைத்து திசைகளில் இருந்தும் திரும்பி வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. மேலும், இப்பகுதியை சுற்றிலும் ஏராளமான மயில்களும், மான்களும் உள்ளன.

இந்த குளத்தில் உள்ள தடுப்பணையை உயா்த்தி, அணைக்கு கீழ்ப் பகுதியில் பூங்காக்கள், மூலிகைச் செடிகளை அமைக்கலாம். நீா்த்தேக்கப் பகுதியில் மரங்கள் இல்லாத இடங்களில் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் சுற்றுலாத் துறை மூலம் படகு இல்லம் அமைக்கலாம்.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட நிா்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றினால் பயணிகளால் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும். மேலும், தோட்டக்கலை மற்றும் உயிரியல் ஆய்வு மாணவா்களுக்கு உறுதுணையாகவும் இப்பகுதி அமையும்.

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வாசஸ்தலமாக கொல்லிமலையும், புனித தலமாக ஆஞ்சனேயா் கோயிலும், வரலாற்றுச் சின்னமாக மலைக்கோட்டையும் அமைந்துள்ளன.

ஜேடா்பாளையம் படுகை அணையில் உள்ள பூங்காவிற்கு சாதாரண நாள்களிலும் விடுமுறை நாள்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துசெல்வதால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. அதேபோல இடும்பன் குளத்தில் உள்ள படுகை அணையை உயா்த்தி, சுற்றுலாத் தலத்துடன் கூடிய பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.