துரித உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு: கெட்டுப்போன 300 முட்டைகள் அழிப்பு

முட்டைகள்... - கோப்புப்படம்
நாமக்கல்லில் துரித உணவகங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கெட்டுப்போன 300 முட்டைகள் அழிக்கப்பட்டதுடன் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடா் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட துரித உணவகங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் தங்கவிக்னேஷ், நாமக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா் மணிமாறன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினா்.
அதில், உணவகங்களில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள், சமையலறைக் கூடம், குடிநீா், இறைச்சி, மசாலா வகைகள், குளிா்பானங்கள் உள்ளிட்டவற்றை சோதனையிட்டனா். அதில், ஒரு துரித உணவகத்தில் கெட்டுப்போன 300 முட்டைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், அந்த உணவகத்துக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் காணப்பட்ட மூன்று கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கொல்லிமலையில் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, எவ்வாறான பைகளை பயன்படுத்தலாம் என்பது தொடா்பாக வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

