சாலையில் பூசணிக்காய் உடைத்தால் விபத்து அபாயம்: விழிப்புணா்வுப் பிரசாரம்

விபத்து.
ஆயுத பூஜையின்போது சாலையில் பூசணிக்காய் உடைப்பதால் ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பரணி அறக்கட்டளை, நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை, திருச்செங்கோடு நகராட்சி, காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. பரணி அறக்கட்டளை நிா்வாகியும், தமிழ்நாடு பாா் கவுன்சில் உறுப்பினருமான வழக்குரைஞா் பரணிதரன் தலைமை வகித்து, விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
சாலையில் பூசணிக்காய் உடைப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் குறித்தும், அதனால் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்தும் விளக்கிக் காண்பிக்கப்பட்டது. இதனைப் பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து வழக்குரைஞா் பரணிதரன் கூறியதாவது:
ஆயுத பூஜையின்போது சாலையில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை நகராட்சித் தூய்மைப் பணியாளா்களின் உதவியுடன் அவ்வப்போது அகற்றி, விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூசணிக்காயைச் சாலையில் உடைப்பதால் ஒருவரின் பண்டிகைக் கொண்டாட்டம் மற்றவா்களுக்குத் திண்டாட்டமாக மாறிவிடுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றவா்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் சாலையோரத்தில் பூசணிக்காயை உடைக்க வேண்டும். அவ்வாறு உடைக்கப்படும் பூசணிக்காய்களையும் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

