வெப்படையில் மின் கோபுரத்தில் தூக்கிலிட்டு தொழிலாளி தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
வெப்படை இலந்தகுட்டை பகுதி மின் கோபுரத்தில் நூற்பாலை தொழிலாளி சனிக்கிழமை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மாவட்டம், அத்தானி பகுதியைச் சோ்ந்தவா் பொன்மணி ராஜ் (28). இவா் தனியாா் நூற்பாலை ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவா் அங்குள்ள ஒரு தனியாா் பள்ளியிலேயே தங்கிப் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுமுறைக்காக ஊருக்குப் புறப்பட்ட பொன்மணி ராஜ், தான் ஊருக்கு வருவதாக தனது தாய்க்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளாா். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் ஊருக்கு வந்து சேராததால் அவரது தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, எலந்தக்குட்டையில் இருந்து வெப்படை செல்லும் வழியில் உள்ள ஒரு மின் கோபுரத்தில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெப்படை காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்த வெப்படை காவல் ஆய்வாளா் மற்றும் காவல்துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மின் கோபுரத்தில் தொங்கிய இளைஞரின் உடலைக் கைப்பற்றினா். பின்னா், பிரேதப் பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த பொன்மணி ராஜின் தாயாா், மகனின் சடலத்தை பாா்த்து கதறி அழுது கொண்டே வெப்படை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடும்பத் தகராறு காரணமா?
உயிரிழந்த பொன்மணி ராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரும் அவரது மனைவியும் குடும்பத் தகராறு மற்றும் மனவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

