பொதுமக்களுக்கு வழங்கும் இணையதள சான்றுகளுக்கான செலவின தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் விடுப்பு எடுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்று, இருப்பிட சான்று, ஜாதிச் சான்று உள்ளிட்டவை பொது சேவை மையங்கள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பொதுமக்களுக்கு வழங்கும் சான்றுகளுக்கு ஒப்புகை வழங்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, அரசு சார்பில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மேலும் மடிக்கணினி இணையதள சேவைக்கு மோடம் வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இணையதளக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சொந்த செலவில் அரசுப் பணிகளை மேற்கொள்ளும் நிலைக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தள்ளப்பட்டனர். மேலும் இதற்கான பணத்தை தரும்படி அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைக்கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை விடுப்பு எடுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் விடுப்பு எடுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், இணையதள சேவைக் கட்டணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். அதேபோல மடிக்கணினிகளை ஒப்படைக்கும் போராட்டமும், அதைத்தொடர்ந்து காத்திருப்புப் போராட்டமும் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வருவாய்த் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தனர்.
வாழப்பாடியில்...
வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு வழங்கிய மடிக்கணினிகளை வட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், இணைய வழி செலவினத் தொகையை வழங்க வேண்டும். இணைய வழியில் சான்றுகள் வழங்குவதைத் தவிர்த்து காகித முறையில் வழங்க வேண்டும். நகரங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரையின்றி பட்டா மாறுதல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாவட்ட பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாழப்பாடியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில், சங்க நிர்வாகிகள் அய்யனார், பொருளாளர் பிரசாத், உமா, விஜயராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்று அரசு வழங்கிய 15 மடிக் கணினிகளையும், வட்டாட்சியர் பொன்னுசாமியிடம் ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, புதன்கிழமை பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் சிறு விடுப்பு எடுத்து பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.